தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (21-10-25) காற்றதழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் நாளை (22-10-25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து, நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்து வரக்கூடிய 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.