A new building for government school that was operating in tin shed at cost of Rs. 1.68 crore
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2007 ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம் சில ஆண்டுகளிலேயே பழுதடைந்து உடைந்ததால் 2017 ம் ஆண்டு பாதுகாப்பில்லாத பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப முடியாது என்று பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் பாதுகாப்பில்லாத ஆபத்தான கட்டடம் என்று பூட்டி சீல் வைத்தனர்.
அதனை தொடர்ந்து, மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க அப்போதைய மாவட்ட ஆட்சியர் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நிதியில் அரை சுவர், ஜன்னல் கம்பிகளுடன் தகர சீட் போட்டு 6 வகுப்பறை கட்டப்பட்டது. வெயில் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மரத்தடியிலும், கிராமத்தினர் அமைத்துக் கொடுத்துள்ள சைக்கிள் நிறுத்தும் திறந்தவெளி தகரக் கொட்டமையிலும் என வகுப்பறை கட்டடம் இல்லாமல் 205 மாணவ, மாணவிகள் பாதுகாப்பில்லாத தற்காலிக தகர கொட்டகையில் பல வருடமாக பயின்று வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/aras1-2025-11-07-23-21-29.jpg)
மழை காலங்களில் தற்காலிக வகுப்பறை தகரக் கொட்டகையில் மழைச் சாரல் அடிப்பதால் மாணவ, மாணவிகள் புத்தகப் பைகள் நனையாமல் தூக்கி வைத்துக் கொண்டு நிற்கும் அவல நிலையில் உள்ளது. இதனை கடந்த 2023 அக்டோபர் 13 ந் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டிருந்தோம்.
செய்தி வெளியிட்ட அடுத்த சில நாட்களில் அமைச்சர் மெய்யநாதன் அரயப்பட்டியில் நடந்த கலைஞரின் வரும் முன் காப்போம் முகாமில் கலந்து கொண்டு பேசும் போது, ‘திருநாளூர் தெற்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம் சில ஆண்டுகளிலேயே சேதமடைந்துவிட்டது. ஒரு கட்டடம் 40 ஆண்டுகள் வரை சேதமடையாமல் இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் கட்டடம் கட்டிய ஒப்பந்தக்காரர் அவ்வளவு மோசமாக கட்டியதால் சில ஆண்டுகளில் சேதமடைந்துவிட்டது. கட்டடம் சேதமடைந்து விட்டதை அறிந்து ஆபத்து வராமல் தடுக்க நான் போய் பார்த்து உடைக்கச் சொன்னேன். ஆனால் அந்த மாணவர்கள் பாதுகாப்பான வகுப்பறையில் படிப்பதாக கணக்கில் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் படிப்பதை அதிகாரிகளிடம் கூறி கட்டடம் இல்லை என்பதையும் கூறி உடனே ஆய்வு செய்ய வைத்தேன். விரைவில், திருநாளூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நபார்டு மூலம் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டப்படும்’ என்றார். அதன் பிறகு, தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் ஆகியோர் சிறப்பு ஏற்பாட்டில் ரூ.1.68 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.
இந்த நிலையில் இன்று (07-11-25) புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற அமைச்சர், உங்களுக்கான பள்ளி கட்டடத்திற்கு நீங்களே அடிக்கல் நாட்டுங்கள் என்று மாணவ, மாணவிகளை அடிக்கல் நாட்ட வைத்தார்.பல வருடமாக வகுப்பறைகள் இல்லாமல் சிரமப்பட்ட மாணவ மாணவிகளுக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் நன்றி கூறினர்.
Follow Us