நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதே வேளையில், சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம், வாக்காளர் பட்டியல் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று (21-08-25) உடன் நிறைவடைந்தது.

Advertisment

இந்த நிலையில், இன்று (22-08-25) காலை நாடாளுமன்றத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்கு எப்போதும் இருக்கக்கூடிய ஒரு பகுதியாக இருக்கிறது. குறிப்பாக 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள், பாதுகாவலர்கள் என அந்த பகுதி முழுவதுமே பலத்த பாதுகாப்பாக இருக்கும். இந்த நிலையில், இன்று அதிகாலை 6:30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சுற்றுச்சுவர் மீது ஏறி நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு படையினர், அந்த நபரை சுற்றிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அந்த நபர் எங்கிருந்து வந்தார்? எப்படி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்? எதற்காக அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 2023ஆம் ஆண்டில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு நபர்கள் மக்களவைக்குள் குதித்து வண்ணப் புகையை தூவி கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம், நாடாளுமன்றத்தினுடைய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. அதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மர்ம நபர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற சம்பவத்தால் நாடாளுமன்ற பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கி உள்ளது.