கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவர், மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த சந்து ரத்தோட் என்பவர் அம்மாநில கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், மலக்பேட்டையில் உள்ள ஷாலிவாஹானா நகர் பூங்காவில் சந்து ரத்தோட் இன்று காலை 7 மணியளவில் உடல்பயிற்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வெள்ளை நிற கார் ஒன்றில் இருந்து 4 பேர் கொண்ட மர்ம கும்பல், ரத்தோட்டை கடுமையாக தாக்கினர். மேலும் அவர் மீது மிளகாய் பொடியை வீசியும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த ரத்தோட், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த கும்பல் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரத்தோட்டை நோக்கிச் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தோட்டின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சந்து ரத்தோட்டின் மனைவி, தேவருப்பலாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) [CPI(ML)] உடன் தொடர்புடைய ராஜேஷ் என்ற நபர், ரத்தோட் மீது நீண்டகாலமாக பகைமை கொண்டிருந்ததாகவும், இந்த கொலைச் சம்பவத்தில் ராஜேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எஸ்சி பிரிவுத் தலைவர் அனில் மரேலி என்பவர் நேற்று (14-07-25) ஹைதராபாத் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் சாலை விபத்தில் இறந்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார், தற்போது அவர் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அடுத்த நாளே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.