உத்திரபிரதேசம் மாநிலம், ஹமிர்பூரைச் சேர்ந்தவர் பிரீத்தம் சிங் கிசான். இவர் ஹமிர்பூர் மாவட்டத்தின் பா.ஜ.க மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தகராறு காரணமாக போலீசார் இவரை கைது செய்தனர். அங்கு அவரை விசாரணை நடத்தி, அவரது உரிமம் பெற்ற துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து, அவரது துப்பாக்கியை அவரிடமே கொடுத்து அவரை மறுநாள் விடுவித்தனர்.
இதனிடையே பிரீத்தம் சிங் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி திடீரென மாயமானார். தனது சகோதரரை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்துள்ளதாகவும், தற்போது அவர் காணாமல் போனதாகவும் பிரீத்தம் சிங்கின் சகோதரர் வீர் சிங் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரீத்தம் சிங்கை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
அதனை தொடர்ந்து, டிசம்பர் 8ஆம் தேதி மாவட்ட கண்காணிப்பாளர் தீக்ஷா சர்மான் நீதிமன்றத்தில் ஆஜராகி பிரீத்தம் சிங்கை கண்டுபிடிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி லக்னோவில் உள்ள வீட்டில் பிரீத்தம் சிங் பதுங்கி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்ததால் அது தனக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக பிரீத்தம் சிங் கருதியுள்ளார். அதனால் போலீசாருக்கு பாடம் கற்பிக்க தான் காணாமல் போனதாக நாடகம் ஒன்றை தீட்டி 55 நாட்கள் பதுங்கி இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, அவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்கு முதியோர் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
Follow Us