ஆடைகள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க முக்கிய பங்கு வகிக்கிறது திருப்பூர் நகரம். ஜவுளி மற்றும் நார் தொழிற்சாலைகளின் பங்குதாரர்கள் மற்றும் முகவர்களிடையே வலிமையான உறவைக் கட்டமைத்திருக்கிறது வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வர்த்தகக் கூட்டமைப்பு திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியிருக்கிறது. தமிழக வர்த்தகத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக இந்த கலந்துரையாடலை உற்றுக் கவனிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
வர்த்தக உறவை வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் கடந்த 10-ந்தேதி திருப்பூரில் நடத்தியது வ.உ.சி. துறைமுக வர்த்தக கூட்டமைப்பு. இக்கூட்டமைப்பில், வர்த்தக முகவர்களின் குறைபாடுகளும் அதற்கான தீர்வுகளும் கேட்டறியப்பட்டு, சர்வதேச வர்த்தக மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் துறைமுகத்தின் வர்த்தக உறவை விரிவுப்படுத்தும் முகமாக நடத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு நிறுவனங்கள், புதிய வர்த்தக முறைகளை கையாள்வதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பின் கலந்துரையாடலில் திருப்பூர், பொள்ளாச்சி, கரூர் பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வர்த்தக முகவர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வ.உ.சி.துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித், "திருப்பூர், பொள்ளாச்சி, கரூர் பகுதிகள் ஏற்றுமதி வர்த்தகத்தில் முதன்மை மையங்களாக இருக்கின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில் போட்டிகள் அதிகரித்திருந்தாலும் வ.உ.சி.துறைமுகம், கடற்சார் வர்த்தகத்தின் நுழைவு வாயிலாக திகழ்வதற்கு இந்த கூட்டமைப்பின் கூட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. திறனை அதிகரிப்பதற்கான சலுகைகளை வழங்குவது மட்டுமல்லாமல், அதிக செலவு திறனும் அதிக செயல்திறனும் வழங்குவதுதான் துறைமுகத்தின் முக்கிய நோக்கம். இதன் மூலம், வ.உ.சி. துறைமுகம் ஜவுளி மற்றும் நார் துறைகளின் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும்" என்றார்.
"இந்த வர்த்தக கூட்டமைப்பின் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட யோசனைகள், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் பேருதவியாக இருக்கிறது" என்கின்றன தொழில் நிறுவனங்கள்.