புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று (09.12.2025) காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே காலை 11 மணி அளவில் விஜய் பேச உள்ளார். அதன்படி சுமார் 30 நிமிடம் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, விரைவு (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் பாண்டிச்சேரி எல்லையைச் சுற்றிலும் சுமார் 17 இடங்களில் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்துக் கண்காணிப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூட்டம் நடைபெற உள்ள உப்பளம் மைதானத்திற்குள் வருபவர்களை மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு கியூஆர் கோடு உடன் கூடிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மெட்டல் டிடக்டர் மூலம் பரிசோதனை செய்தபோது துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் சிக்கினார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் த.வெ.க. சிவகங்கை மாவட்டச் செயலாளர் பிரபுவின் தனிப் பாதுகாவலர் டேவின் என்பவர் தான் பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கியைக் கொண்டு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும் என்பதால் எதற்காகக் கொண்டு வந்தீர்கள் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கோ இங்கு அனுமதி கிடையாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாகவும் கூறி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். த.வெ.க தலைவர் விஜய்யின் கூட்டத்திற்குக் கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/09/tvk-anand-mic-2025-12-09-09-52-01.jpg)
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், “மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us