திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் முகமதுபுரா மசூதி இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் பாஷா. இவர், ஆம்பூர் நேதாஜி சாலையில் ஸ்டேட் வங்கி எதிரில் கடந்த 20 ஆண்டுகளாக பேன்சி ஸ்டோர் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் முபாரக் பாஷா கடைக்குச் சென்றிருந்தபோது, அவரது மனைவி சுல்தானா மற்றும் மகள் மிஸ்கான் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணி அளவில், ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள வீட்டிற்குள், பத்திரிகை கொடுப்பதாகக் கூறி புர்கா அணிந்த நபர் நுழைந்துள்ளார். ஆனால், உள்ளே நுழைந்ததும், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வீட்டில் தனியாக இருந்த மிஸ்கான் மற்றும் சுல்தானாவை மிரட்டி, வீட்டில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

104

கொள்ளையன் பர்தா அணிந்தபடி வீட்டிலிருந்து வெளியேறி தப்பி ஓடும் காட்சி, அருகிலுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மற்றும் ஆம்பூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டு, கொள்ளை சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

ஆம்பூர் டி.எஸ்.பி. அலுவலகம், கிராமிய காவல் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவை 500 மீட்டர் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவத்தால், ஆம்பூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.