அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியிருந்தார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன். 

Advertisment

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டுமானால் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனம் திறந்தார். அதற்கு வசதியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார்.

செங்கோட்டையனின் இந்த பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டினார் எடப்பாடி. இந்த நீக்கம், செங்ஸ் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தனது ஆதாரவாளர்களுடன் அடுத்தக்கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், எம்.ஜி.ஆர். பாணியில் நீதிகேட்டு நெடும்பயணத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Advertisment

இது குறித்து அவரது ஆதரவாளர்களிடம் பேசியபோது, "நான் என்ன தவறு செய்தேன்? அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்; அதற்கு கட்சியில் ஒற்றுமை வேண்டும். பிரிந்தவர்களை ஒன்றிணையுங்கள் எனச் சொன்னேன். இது தப்பா? கட்சி வலிமையாக வேண்டும் என்பதை வலியுறுத்திய நான் நீக்கப்பட்டிருக்கிறேன். உண்மைக்கும் நேர்மைக்கும் இதுதான் தண்டனையா?

நீங்களே நீதி வழங்குங்கள் என அதிமுக தொண்டர்களிடம் நீதி கேட்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் வருவதற்கு திட்டமிட்டுள்ளார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர். ஆட்சியை 1980-ல் கலைத்தார்கள். உடனே, என்ன தவறு செய்தேன் ? எதற்காக ஆட்சியை கலைத்தார்கள் ? என மக்களிடம் நீதி கேட்டு பயணம் செய்தார் எம்.ஜி.ஆர். ! மக்கள் நீதி வழங்கினார்கள்.ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர். !அதேபோல கட்சித் தொண்டர்களிடம் நீதிக்கேட்கப் புறப்படுகிறார். நிச்சயம் நீதி கிடைக்கும்" என்கின்றனர்.