ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து செர்ல்லோபள்ளி செல்லும் சாலையில் பல்கலைக்கழகம், கண் மருத்துவமனை, அறிவியல் ஆய்வகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான்  கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதன் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று திடீரென சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக பைக்கில் சென்றவர் மீது இந்த சிறுத்தை தாக்க முயன்றது. நல்வாய்ப்பாக அவர் மயிரிழையில் தப்பித்துச் சென்றார். அதே சமயம் அவருக்குப் பின்னால் வந்த காரில் இருந்த கேமிராவில் இது தொடர்பான காட்சிகள் வீடியோவாக பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைத்தது.

Advertisment

மேலும் இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் நடமாட்டம் குறித்துக் கண்காணித்து வந்தனர். அதோடு சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். கடந்த சில வாரக் காலமாகச்  சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் சுற்றி வந்தது. அதற்கு முன்னதாக சாலையோரத்தில் அமர்ந்திருந்த நிலையில் அதனை அவ்வழியாகச் சென்ற ஒரு வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இத்தகைய சூழலில் தான் அவ்வழியாக வழியாகச் சென்ற வாகன ஓட்டியைத் தாக்கிய சம்பவம் அப்பகுதி மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த சில மாதங்களாகவே அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. அதே சமயம் இரவு நேரங்களில் பைக்கில் தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதி முழுவதும் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து சிறுத்தையைப் பிடிப்பதற்குத்  வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் வேட்டை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் அருகே ஒரு மானைப் பாதி சாப்பிட்ட நிலையில் சிறுத்தை விட்டுச் சென்றது.

இதனையடுத்து மீண்டும் அந்த இடத்திற்குச் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஒரு கூண்டை அமைத்தனர். அதன்படி அந்த கூண்டில் இன்று (18.08.2025) காலை சிறுத்தை பிடிபட்டது. அதன் பின்னர் இந்த சிறுத்தையை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்கான பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகப் பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவர்கள் கூறியுள்ளனர். எனவே அந்த சிறுத்தைகளையும் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். அதே சமயம் சிறுத்தை பிடிபட்ட சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.