அரசு நிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டுவதை எதிர்த்ததால், பட்டியலின நபரை கொடூரமாகத் தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலம் காட்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சவுத்ரி (36). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள ராம்கர்ஹா மலையிலிருந்து சட்டவிரோதமாக சரளை கற்களை வெட்டி எடுத்ததாகக் கூறப்படுகிறது. கிராம பஞ்சாயத்து ராமானுஜ் பாண்டே அவரது கூட்டாளிகளின் மேற்பார்வையில் நடைபெற்ற இதனை, ராஜ்குமார் சவுத்ரி எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ராஜ்குமாரிடம் சாதி ரீதியான அவதூறு வார்த்தைகளைப் பேசியுள்ளனர். மேலும், அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டியும் உள்ளனர்.

Advertisment

இதனையடுத்து ராஜ்குமார் அங்கிருந்து கிளம்பி தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராமானுஜ் பாண்டே, அவரது மகன் பவன் பாண்டே, மருமகன் சதீஷ் பாண்டே ஆகியோர், கம்பி மற்றும் தடிகளை கொண்டு ராஜ்குமாரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனை கண்ட ராஜ்குமாரின் தாய், அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவரையும் அடித்துள்ளனர். இதனையடுத்து, ராமானுஜ் பாண்டேவின் மகன் பவன் பாண்டே, ராஜ்குமார் மீது சிறுநீர் கழித்துள்ளார். கிராம மக்களின் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால், ராஜ்குமார் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

அதனை தொடர்ந்து, தன் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராஜ்குமார் புகாராக அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment