மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள வித்யா வைபவ் உயர்நிலைப் பள்ளியின் திறந்த வெளி மைதானத்தில் திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. கடந்த செய்வாய் கிழமையன்று மதியம் 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது. இது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பள்ளியில் பெருமளவு காவல் பாதுகாப்புப் படை களமிறக்கப்பட்டது.
அதாவது, தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர் மரஹாரஷ்டிரா மாநிலத்தின் மும்பையின் ஜூஹூவில் இருந்து குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்குப் பயணத்தைத் தொடங்கியது. ஹெலிகாப்டரில் விமானி, பயிற்சி விமானி மற்றும் தொழில் நுட்ப பொறியாளர் உட்பட மொத்தமாக நான்கு பேர் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது, ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அதில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது, விமானம் மும்பையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஃபாலே பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது சிவப்பு மணி ஒலிப்பதை விமானி கவனித்தார். இதையறிந்த விமானி, ஹெலிகாப்டரை பள்ளியின் மைதானத்தில் தரையிறக்கினார். பின்னர், விமான பொறியாளர் தொழில்நுட்ப கோளாற்றைக் கண்டறிந்து சரிசெய்தார். சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, தொழில் நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மும்பையின் ஜுஹுவுக்கு ஹெலிகாப்டர் பறந்து சென்றது.
Follow Us