சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவின் கீழ் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜாராமன் (வயது 54). இவர் பணி நிமித்தமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் இவர் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை அருகே உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியில் கடந்த 18ஆம் தேதி (18.07.2025) இரவு கலந்து கொண்டார். அதன்படி ராஜாராமன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது இந்த விளையாட்டு தொடர்பாக அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காவல் உதவி ஆய்வாளரை அவரது நண்பர்கள் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சை பலனின்றி இன்று (26.07.2025) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை எழும்பூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்ததி வருவதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான எஸ்ஐ ராஜாராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/26/a4553-2025-07-26-17-49-17.jpg)
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது, மாபெரும் தலைகுனிவு. தலைநகர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜாராமனை மதுபோதையில் அவருடைய நண்பர்களே அடித்துக் கொலை செய்திருப்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு. பெரும் இழுக்கு. வெட்கக்கேடான செயல். டாஸ்மாக் போதை கொடுமைக்கு உயிர்கள் பலியாகும் கொடுமை இன்னும் எத்தனை நாளைக்கு தொடருமோ?
இறந்து போன காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் பிரிவு வார்டின் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான் ராஜாராமன், எழும்பூரில் "ஸ்னூக்கர்" விளையாடப் போன இடத்தில் கடந்த 18-ஆம் தேதி நண்பர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்திருக்கிறார். நண்பர்கள் ராக்கி (எ) ராகேஷ், ஐயப்பன் (எ) சரத்குமார் மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட நண்பர்களோடு மோதல் ஏற்பட்டுதான், ராஜாராமன் தலை உடைந்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு எட்டு நாட்கள் சிகிச்சையில் இருந்து இன்று இறந்திருக்கிறார். டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ?' என தெரிவித்துள்ளார்.