வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலம் 37 ஆவது வார்டு ஓல்டு டவுன் பகுதியில் உள்ள தோல் கிடங்கு மெயின் ரோடு பகுதியில் நேற்று (30.08.2025) மாநகராட்சியின் தூய்மை பணியாளர் நவீன் (வயது 31) என்பவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி அப்பகுதியில் உள்ள வீட்டிலிருந்து ஒப்படைத்தவர்களின் குப்பைகளை தரம் பிரித்துள்ளார். அப்போது அதில் அரை சவரன் தங்க மோதிரம் இருந்துள்ளது.
இதுகுறித்து அவருடைய உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகையை தவறவிட்டது தோல் கிடங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த உஷா என்பதும், அவர்கள் நகையை தேடி வந்ததும் தெரியவந்து. இதனையடுத்து அரை சவரன் தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட அப்பெண்மணி தூய்மை பணியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு தூய்மை பணியாளரின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.