அழகான பெண்கள் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக ஒரு இளம் பெண் கொலையாளியாக மாறியிருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதுவும் சாதாரண கொலைகாரி அல்ல, யாரும் எளிதில் மறக்க முடியாத அஞ்சி நடுங்கக்கூடிய ஒரு சைக்கோ கொலைகாரியாக மாற்றியிருக்கிறது.
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் பவத் கிராமத்தில் 1 ஆம் தேதி கோலாகலமாக ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியும் களிப்பும் நிறைந்து உற்சாகமாக இருந்தனர். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த 6 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அனைவரும் சுற்றுமுற்றும் தேடத் தொடங்கினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது திருமணம் நடக்கும் வீட்டின் மேல் அறைக்குச் சென்று பார்த்தபோது கதவு வெளிப்பக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அந்த ஆறு வயது சிறுமி சடலமாகக் கிடந்தார்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமியின் தலை மட்டும் தண்ணீர் தொட்டிக்குள் இருக்க, கால்கள் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. அத்துடன் அறை வெளியில் இருந்து தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. யாரோ வேண்டுமென்றே கொலை செய்துவிட்டு அறையைப் பூட்டிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பானிபட் போலீசார் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரிடமும் விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது உயிரிழந்த சிறுமியின் அத்தையான இளம் பெண் பூனம் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது. அவரைப் பிடித்து விசாரித்ததில் “சிறுமியை நான்தான் கொன்றேன்” என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
இளம் பெண் பூனத்திற்கு, யாராவது தன்னைவிட அழகாக இருந்தால் எரிச்சலும் அதீத கோபமும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னைவிட அழகாக இருக்கும் சிறுமிகளை பூனம் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு உறவுக்காரச் சிறுமி ஒருவர் பூனத்தைவிட அழகாக இருந்தார். அதனால் ஆத்திரமடைந்த பூனம் அந்தச் சிறுமியைத் தண்ணீரில் அமிழ்த்திக் கொலை செய்தார். இதை பூனத்தின் மகன் பார்த்துவிட்டதால், வெளியே சொல்லிவிடுவான் என்ற அச்சத்தில் பெற்ற மகன் என்று கூடப் பார்க்காமல் அவனையும் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். உறவினர்கள் அனைவரும் இருவரும் தற்செயலாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று நம்பினர். மேலும் பூனத்தின் மகனும் உயிரிழந்திருப்பதால் அவர்மீது யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சிவா கிராமத்தில் ஒரு சிறுமி தன்னைவிட அழகாக இருந்ததால் அவரையும் அதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். இதையும் தற்செயல் மரணம் என்றே அனைவரும் கடந்து சென்றனர். இப்படி தான் செய்யும் கொலைகள் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாத நிலையில் அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தார். அந்த வரிசையில்தான் டிசம்பர் 1-ம் தேதி அழகாக இருந்த காரணத்திற்காகச் சொந்த அண்ணன் மகளையே பூனம் கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், பூனம் வேறு யாரையாவது கொலை செய்திருக்கிறாரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில சிறுமிகளையும் பூனம் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமிகளின் பட்டியலை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய பானிபட் எஸ்பி பூபேந்திர சிங், “அழகான குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் இவருக்கு கடுமையான எரிச்சலும் வெறுப்பும் ஏற்பட்டிருக்கிறது. தன்னைவிட அழகாக யாரும் வளரக் கூடாது என்கிற மனநிலை கொண்டவர். திட்டமிட்டு, புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு 4 பேரையும் கொலை செய்திருக்கிறார். சொந்த மகனையே கொல்லத் தயங்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/ag-2025-12-04-15-50-26.jpg)