தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினரின் மகள் தர்ஷிகா (வயது 10) ஆவார். இத்தகைய சூழலில் தான் இவருக்கு திடிரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது . இதனையடுத்து திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி தர்ஷிகா நேற்று (03.12.2025) பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள இடுகாட்டில் அவரது உடல் புதைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (04.12.2025) அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்காகச் சிறுமியின் தந்தை மற்றும் அவரது உறவினர் இடுகாட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் குழி தோண்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதோடு அங்கிருந்த சிறுமியின் உடல் மாயமானது தெரியவந்தது.மேலும் சிறுமியின் உடை, எலுமிச்சை பழம் மற்றும் குங்குமம் உள்ளிட்ட பொருட்களும் அங்கு இருந்துள்ளன. இதனையடுத்து இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us