திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகர் மற்றும் தெற்கு மில்லத் நகர் பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சாலையோரம் முனியப்பன் என்பவர் வீட்டின் அருகில், மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை ஒன்று, கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பெய்த மழை காரணமாக உருண்டு சாலையின் நடுவில் விழுந்ததால், அவ்வழியாகச் செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால், சாலையின் இருபுறமும் வீடுகள் இருந்தபோதிலும், உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.

Advertisment

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் தலைமையில் வருவாய்த் துறையினரும், நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில் நகராட்சிப் பணியாளர்களும் விரைந்து சென்று, கல் உடைக்கும் கூலித் தொழிலாளர்களின் உதவியுடன், ராட்சத பாறையை உளி கொண்டு உடைத்து, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

சம்பவத்தை அறிந்து, நகர திமுக செயலாளர் வி.எஸ். சாரதி குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, ராட்சத பாறையை அகற்றி, விரைவாகப் போக்குவரத்தைச் சீர் செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், அப்பகுதியில் ஆபத்தான முறையில் உள்ள ராட்சத பாறைகளை அகற்ற வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.