திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள செங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பாலாமணி. சம்பவத்தன்று இரவு நேரத்தில் அந்த தம்பதியினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், தூங்கிக்கொண்டிருந்த அவர்களைத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். சற்றும் எதிர்பாராத இந்த கொடூர சம்பவத்தில், சிக்கிய அவர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். அந்த சமயத்தில், அந்த கும்பல் தம்பதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும், கம்மலையும் பறித்துள்ளனர்.
மேலும், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த ஒரு லட்ச ரூபாயைக் கொள்ளையடித்துள்ளனர். இதைத் தடுக்க முயன்ற கோவிந்தசாமியை, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், அவருக்கு நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. "காவல்துறைக்குத் தகவல் கொடுத்தல் எங்கிருந்தாலும் வந்து சங்கை அறுத்து விடுவோம்" என்று அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தம்பதியை மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அந்த கும்பல் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த கொடூர சம்பவம் குறித்து, அந்த தம்பதியினரின் உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
இதனிடையே, சம்பவத்தன்று குறிப்பிட்ட அந்த நேரத்தில் அப்பகுதிக்குச் சென்று வந்தவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்தனர்.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பல்லடம் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் அந்த பகுதிக்குச் சென்று குற்றத்தில் ஈடுபட்ட அந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை மடக்கிப் பிடித்தது. கைது செய்யப்பட்டவர்களில் சிவா, ஸ்ரீகாந்த், சண்முகம் உட்பட 17 வயது சிறுவன் ஒருவன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/siren-police-2026-03-05-08-32-00.jpg)