ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் சொந்தமாக 5 ஏக்கரில் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், விவசாயி மகேந்திரனுக்கு ஈரோடு மாவட்டம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மத்திய அரசின் திட்டம் தொடர்பான அலுவலர் பேசுவதாக அவரது செல்போன் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அந்த மர்ம நபர் பேசுகையில், மொத்தம் உங்களுக்கு இவ்வளவு ஏக்கர் பரப்பளவில் நிலம் இருப்பதாகவும், இயற்கை வேளாண்மை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற திட்டம் இருப்பதாகவும், அதில் நீங்கள் இணைந்து கொள்ள 18,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தினால் மத்திய அரசின் சார்பில் ரூ.1 லட்சம் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறியுள்ளார். தொடர்ந்து, இரண்டரை ஏக்கருக்கு 9 ஆயிரம் ரூபாய் கட்டினால் உங்களுக்கு மக்காச்சோளம் விதைகள் உட்பட 9 வகையான உரை மூட்டைகள் தரப்படும் எனவும், மேலும் ஒரு லிட்டர் நானோ யூரியா 2 பாட்டில்கள் தரப்படும், மண்புழு உரம் இரண்டு யூனிட் தரப்படும் எனவும் கூறியுள்ளார். 

இதற்கு விவசாயி மகேந்திரன் பணத்தை எப்படி செலுத்துவது என அந்த நபரிடம் கேட்டவுடன் அரசாங்க வங்கி கணக்கிற்கு நீங்கள் நேரடியாக பணத்தை செலுத்த முடியாது எனவும், அதனால் நீங்கள் எனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை உடனடியாக செலுத்துங்கள் என கூறியுள்ளார். இதில் சுதாரித்து கொண்ட விவசாயி மகேந்திரன் தொடர்பை துண்டித்து விட்டார். இது குறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அமைப்பினர் வாட்ஸ்-அப் மூலம் விவாதித்து கொள்ளும் போது விவசாயிகள் சிலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்தது. 

இதனால் மத்திய அரசின் வேளாண்மை கீழ் வழங்கப்படும் மானியம் வைத்து விவசாயிகளிடம் மோசடியில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, மத்திய அரசிடம் இருந்து இது போன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை எனவும், விவசாயிகள் இதுபோன்று யாராவது போன் செய்தால் நம்பி ஏமாந்து பணம் கொடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.