கரூர் மாவட்டம் நொய்யல், அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (30). இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் விடுதியில் தங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில், ஜெகதீசன் மொபைல் போன் செயலி மூலம் ஒருவருடன் பேசி வந்துள்ளார். அப்போது அந்த நபர் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதை நம்பி, நேற்று இரவு ஜெகதீசன் தனது மோட்டார் சைக்கிளில் அந்த நபர் கூறியவாறு காஞ்சிகோவில் ரோடு, பாறைக்கடை பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றார். அங்கு காத்திருந்த ஒரு நபர், ஜெகதீசனிடம் வந்து பெண் காட்டுப்பகுதியில் இருப்பதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார். காட்டுப்பகுதிக்கு சென்றதும் அங்கு ஏற்கனவே மூன்று பேர் தயாராக இருந்தனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து ஜெகதீசனை தாக்கியுள்ளனர். ஜி-பே மற்றும் ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.30 ஆயிரம் பணத்தையும், ஜெகதீசன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதனை தொடர்ந்து, ஜெகதீசன் நடந்த சம்பவம் குறித்து காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். வாலிபரை மிரட்டி கும்பல் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.