மருத்துவச் சிகிச்சைக்காக பரோலில் வந்த கைதியை, ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பீகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் மிஸ்ரா என்பவர், பக்சர் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு போலீசார் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அவர் பியூர் சிறையில் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவ பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தன் மிஸ்ரா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குள் புகுந்தனர். அதன் பின்னர், சந்தன் மிஸ்ரா அறைக்குள் துப்பாக்கிகளை ஏந்தியபடி நுழைந்து அவரை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மிஸ்ராவுக்கு பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சைப் பெற்று வந்த ஒருவரை, 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்ற சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், பீகார் சட்டம் மற்றும் ஒழுங்கை கேள்வி கேட்பது மட்டுமல்லாமல் பீகார் மாநில அரசியலில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தவறிவிட்டதாக பீகார் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பியான பப்பு யாதவ் கூறுகையில், ‘பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரவேண்டும் என ஆளுநரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். செவிலியர்கள், மருத்துவர்கள் என யாரும் இங்கு பாதுகாப்பாக இல்லை. இந்த அரசு, குற்றவாளிகளுக்கும் மாஃபியாக்களுக்கும் அடையாளம் கொடுக்கிறது. பீகாரில் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது’ என்று கூறினார்.