‘ஏ ஃபார் அகிலேஷ் யாதவ், பி ஃபார் பாபாசாகேப்’ - சமாஜ்வாதி கட்சி நடத்தும் பள்ளியில் கற்பிக்கப்படும் பாடம்!

ak

A for Akhilesh Yadav, B for Babasaheb the lesson taught in a school run by the Samajwadi Party

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 403 இடங்கள் கொண்ட அம்மாநிலத் தேர்தலில், பா.ஜ.க 255 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 111 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில், அதிக தொகுதிகள் கைப்பற்றியிருந்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதன்படி அம்மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கன்னோஜ் தொகுதியில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமானர் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டு வெற்றி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, அவர் மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியால் அம்மாநிலத்தில் தொடங்கப்பட்ட பாடசாலைகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ‘ஏ ஃபார் அகிலேஷ் யாதவ்’ (A for Akhilesh yadav), ‘பி ஃபார் பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர்’ (B for Babasaheb bhimrao Ambedkar), என ஆங்கில பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம் முழுவதும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு, பல அரசு பள்ளிகளை மூடியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி பிடிஏ (PDA) எனும் சமூக பள்ளிகளைத் தொடங்கியுள்ளது. பிச்டா (பிற்படுத்தப்பட்ட), தலித், அல்ப்சாங்க்யாக் (சிறுபான்மையினர்) என நலன் சார்ந்து பெயரிடப்பட்ட பிடிஏ (PDA) பள்ளிகளில் இலவசக் கல்வியையும், கட்சியின் முக்கிய சிந்தாந்தத்தையும் புகுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், முதல் முறையாக சஹாரன்பூரில் உள்ள ராம்நகரில் பிடிஏ பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 25 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் மொத்தம் 60 குழந்தைகள் படிக்கின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சமாஜ்வாதி கட்சி தொண்டர் ஃபராஸ் ஆலம் கடா என்பவர் அடிப்படை ஆங்கில வகுப்பை நடத்தினார். அதில் ஏ ஃபார் ஆப்பிள் (A for Apple ) பி ஃபார் பால் (B for Ball) என்று சொல்லி கொடுப்பதற்கு பதிலாக, ‘ஏ ஃபார் அகிலேஷ் யாதவ்’ (A for Akhilesh yadav), ‘பி ஃபார் பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர்’ (B for Babasaheb bhimrao Ambedkar), சி ஃபார் சவுத்ரி சரண் சிங் (C for chauthary charan singh), டி ஃபார் டிம்பிள் யாதவ் (D for Dimple yadav), எம் ஃபார் முலாயம் சிங் யாதவ் (M for mulayam singh yadav) என சமாஜ்வாதி கட்சி தொண்டர் ஃபராஸ் ஆலம் கடா குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஃபராஸ் ஆலம் கடா கூறியதாவது, “இது வெறும் பள்ளி மட்டுமல்ல, இது ஒரு இயக்கம். பா.ஜ.க அரசாங்கம் மாநில அரசு பள்ளிகளை மூடியுள்ளது, ஏழைக் குழந்தைகளின் கல்வியை பறித்துள்ளது. எங்களது தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், எங்கெல்லாம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் பிடிஏ பாடசாலை திறப்போம் என அறிவுறுத்தியிருந்தார். இன்றைய குழந்தை நாளைய குடிமகன். இன்றைய சிந்தனையை நாம் வலுப்படுத்தினால், நாளை அவர்களால் அநீதிக்கு எதிராக நிற்க முடியும். ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் உரிமைகள் குறித்து இருப்பதை உறுதி செய்வதற்காக பா.ஜ.க அரசு பொதுக் கல்வி முறையை வேண்டுமென்றே பலவீனப்படுத்துகிறது. ஏனென்றால் கல்வி இருந்தால் கேள்விகள் இருக்கும். கேள்வி கேட்பது ஜனநாயகத்தில் அடிப்படை உரிமை. இந்த பள்ளி, உள்ளூர் சமாஜ்வாதி தொண்டர்கள் மற்றும் கல்வியாளர்களால் தன்னார்வத்துடன் நடத்தப்படுகிறது. இது எந்த அரசாங்க உதவியும் இல்லாமல், சமூக ஆதரவை நம்பி செயல்படுகிறது. இது எங்கள் முயற்சி. சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் புரிதலுடன் ஒரு புதிய தலைமுறையை தயார்படுத்த ஒரு முயற்சி செய்கிறோம். நாங்கள் அவர்களுக்கு எப்படி படிக்க வேண்டும்?, எப்படி எழுத வேண்டும்? என்பதை மட்டுமல்ல, எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறோம். ஏழைகளின் கல்வியின் கதவிகள் மூடப்பட நாங்கள் விடமாட்டோம். அரசாங்கம் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை என்றால் நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் இருந்தாலும், அக்கட்சியின் நிறுவனர் சோசியலிச தலைவரான முலாயம் சிங் யாதவ் ஆவர். டிம்பிள் யாதவ், அகிலேஷ் யாதவின் மனைவியும் மக்களவை எம்.பியும் ஆவர். சவுத்ரி சரண் சிங் முன்னாள் பிரதமர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

AKHILESH YADAV school uttar pradesh viral video
இதையும் படியுங்கள்
Subscribe