தமிழக கிராமங்களில் ஆடி மாதம் தொடங்கும் கிராம காவல் தெய்வமாக வணங்கப்படும் முனி,அய்யனார் கோயில்களில் குதிரை எடுப்பு கிடா வெட்டு பூஜைகள் ஆவணி மாதங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முனிக்கோயில் பூஜைக்கு நாள் குறித்ததும் 10 நாளைக்கு முன்பே பனை ஓலைகளை வெட்டி நிழலில் காயவைத்து தொன்னைகளை செய்யும் பெரியவர்கள் பூஜை நாளில் ஆட்டுக்கறி ரசத்தையும் சோற்றையும் நிரம்ப நிரம்ப பரிமாற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பசியாறிச் செல்வதை பெருமையாக பேசுவார்கள் கிராமத்தினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/06/a5106-2025-09-06-16-19-52.jpg)
இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள எல்லை கிராம காவல் தெய்வமான புதுக்காளியம்மன் கோயில், முனீஸ்வரர் கோயில் பூஜையை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனாக சுமார் 25 க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டது. மற்றொரு பக்கம் பெரிய பெரிய அண்டாக்களில் மூட்டை மூட்டையாக அரிசிகளை கொட்டி சோறு சமைக்கப்பட்டு குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டிருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/06/a5107-2025-09-06-16-20-37.jpg)
பூஜையில் பலியிடப்பட்ட ஆடுகள் அதே இடத்தில் உரித்து துண்டு துண்டாக வெட்டப்பட்டு பெரிய அண்டாக்களில் ரசம் வைக்கப்பட்டது. சாமிகளுக்கு படைலிட்ட பிறகு பல கிராமங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் ஆளுக்கொரு பாக்குத் தட்டுகளை எடுத்துக் கொண்டு பொட்டல் வெளியில் அமர விழாக்குழுவினர் சோறு பரிமாறியதுடன் மக்குகளில் அள்ளி தட்டு நிறைய ரசத்தை ஊற்றிச் செல்ல பின்னாலயே ஆட்டுக்கறி துண்டுகளை வைத்துக் கொண்டு செல்ல ஆட்டுக்கறி ரசம் சோற்றை ரசித்து ருசித்து சாப்பிட்டுச் சென்றனர்.
இந்த பூஜையில் ஆண்கள் மட்டும் தான் கலந்துக்கனும் ஊரு உறவு எல்லாரையும் அழைத்து பூஜை சோறு போடுறதில் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி என்கின்றனர் கிராமத்தினர்.