ஜார்க்கண்டில் உள்ள தாக்கூர் கந்த்தி மோதியாவைச் சேர்ந்தவர் விக்ரம் சா. இவர் ஒரு கூலித்தொழிலாலி ஆவார். இவரது மனைவி சுவாதி தேவி. சுவாதி கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்கான மருத்துவ வசதிக்காக, தனது தாய் வீடான ரசல்பூரில் தங்கியிருந்தார். அங்கு அவரது தாய் சுஷ்மா தேவி, அவரது சிகிச்சையைக் கவனித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுவாதிக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஹல்கான் பகுதியின், ஸ்ரீமத் ஸ்தானம் அருகேயுள்ள தனியார் மருத்துவ மனைக்கு சுவாதி அழைத்து செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவமனையில் பணிபுரியும் நபர் தான் ஒரு மருத்துவர் என்று அடையாளப்படுத்தி, கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறி, அறுவை சிகிச்சைக்காக குடும்பத்தாரின் சம்மதத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையில், முறையான மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர் இல்லாத நிலையில், அந்த நபர் யூடியூபில் வீடியோக்களைப் பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ய முயன்றுள்ளார். 

Advertisment

மருத்துவம் பற்றி போதிய அனுபவம் இல்லாத அந்த நபரும் அவரது உதவியாளரும் அறுவை சிகிச்சையின் போது, தங்கள் கைபேசிகளில் உள்ள வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். பெண் இறந்ததையடுத்து, அந்த நபரும் அவரது உதவியாளரும், பெண்ணின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். அதன் பின்னர் அந்த நபரும் அவரின் உதவியாளரும் மருத்துவமனையை மூடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  

இந்த தகவலையறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் உறவினர்கள் மாற்றும் ஊர் மக்கள் பெண்ணின் உடலை வைத்து போராட்டம் நடத்தினர். போலியாக தன்னை மருத்துவர் எனக்கூறி இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோதமான முறையில் செயல்படும் இந்த மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த போராட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரசல்பூர் காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு, விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து உள்ளூர்வாசியான ராஜேஷ் குமார், ‘இது அந்த மருத்துவமனையில் நடந்த முதல் சம்பவம் அல்ல. இதற்கு முன்பும் பலமுறை ஆன்லைன் வீடியோக்களைப் பார்த்து சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது, ஆனால் அந்த விவகாரங்கள் எல்லாம் மூடிமறைக்கப்பட்டது" எனவும் கூறினார். கர்பிணிப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதிலும், குழந்தை உயிருடன் பிரசவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.