குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்தவர், ஜவுளிக்கடை உரிமையாளர் சந்திப் கவுட். இவருக்கு வர்ஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். வர்ஷா காஷ்யப்பிற்கு நிஷ்சய் காஷ்யப் என்ற சகோதரனும், மம்தா காஷ்யப் என்ற சகோதரியும் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில், வர்ஷாவின் சகோதரர் நிஷ்சய் காஷ்யப்பிற்கு டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்கிடையில், சந்திப் கவுட்டிற்கு மனைவி வர்ஷாவின் தங்கை மம்தாவின் மீது காதல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், மம்தாவை தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு மனைவியிடம் கேட்டிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், கடும் கோபத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், விடாது சந்திப் கவுட், மம்தாவின் பெற்றோரிடமே, “அவரை எனக்கு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொடுங்கள், நான் உங்களது இரு மகள்களையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர்கள், சந்திப்பின் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, மம்தாவின் சகோதரர் நிஷ்சய் காஷ்யப் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சந்திப்புடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். மேலும், ஒரு கட்டத்தில், “எனது சகோதரியை இரண்டாவதாகத் திருமணம் செய்து தர மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் சந்திப் இதுகுறித்து தனது மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், சகோதரி மம்தாவைத் திருமணம் செய்து வைக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதனால், வர்ஷா என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்திருக்கிறார். இந்த நிலையில், நிஷ்சயின் திருமணத்திற்குத் துணி எடுப்பதற்காக, தாய் சகுந்தலா, சகோதரி மம்தா மற்றும் நிஷ்சய் மூவரும் அக்டோபர் 4 ஆம் தேதி சூரத் வந்துள்ளனர். பின்னர், வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு, இரவு சந்திப்பின் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
இரவு, மனைவி உறங்கியதும், மம்தா தங்கியிருந்த வீட்டின் மேல் தளத்திற்கு சென்ற சந்திப், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார். சத்தம் கேட்டு, அவரது சகோதரர் நிஷ்சய் மற்றும் தாய் சகுந்தலா இருவரும் ஓடி வந்துள்ளனர். அப்போது, அவர்களிடம் மம்தாவைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டபோது, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், இது வாக்குவாதமாக மாறிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மம்தாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதனைத் தடுக்க வந்த நிஷ்சய் மற்றும் தாய் சகுந்தலா இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மம்தாவும், அவரது சகோதரர் நிஷ்சயும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த வர்ஷா மற்றும் அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகுந்தலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோட முயன்ற சந்திப் கவுட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி, “10:30 மணிக்கு தகவல் கிடைத்ததும், நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். சந்திப், வர்ஷாவின் சகோதரியான மம்தாவை திருமணம் செய்ய விரும்பினதால் ஏற்பட்ட சண்டையே இதற்குக் காரணம். நிஷ்சயின் எதிர்ப்பால் வாக்குவாதம் வன்முறையாக மாறியிருக்கிறது. இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம், ஏனெனில், சந்திப் ஆயுதத்தை முன்கூட்டியே கொண்டு வந்திருந்தார். கொலைக்குப் பிறகு, சந்திப் உத்னா ரயில்வே நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஊருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், போலீசின் தீவிர முயற்சியால் ஒரு மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்து விட்டோம்,” என்று தெரிவித்தார். தற்போது, இந்த சம்பவம் சூரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.