அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், பயனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அமர வைத்த பின்பு திடீரென எழுந்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதிக்குட்பட்ட லம்புவா பகுதியில் அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சீதாராம் வர்மா, பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். 16 முச்சக்கர வண்டிகள், 8 சக்கர நாற்காலிகள். 4 ஊண்றுகோல்கள், 1 காது கேட்கும் கருவி மற்றும் 1 நடைபயிற்சி குச்சி ஆகியவை அவர் வழங்கினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில், பயனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கும் போது அந்த பயனாளியை சக்கர நாற்காலியில் அமர வைத்து எம்.எல்.ஏ சீதாராம் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது புகைப்படம் எடுத்த பின்பு, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர் அடுத்த நொடியே யாருடைய ஆதரவுமின்றி மிக இயல்பாக தனது இரண்டு கால்களால் எழுந்து நடக்கத் தொடங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. போலி பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா? என்று கேள்விகளை பலரும் கேட்கத் தொடங்கினர்.

இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, மாவட்ட அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். வங்கேபூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உபகரணம் வழங்கப்பட்டதாகவும், அவர் உடல்நலக்குறைவு காரணமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் சந்தீப்பின் தந்தை இதனை பெற்றுக்கொள்ள வந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சக்கர நாற்காலி கொடுக்கப்பட்டுள்ளது என்ற அடையாளத்திற்காக அந்த நபரை நாற்காலியில் அமர வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisment