ராமநாதபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து கால்வாய் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் பேருந்தை மீட்கச் சென்ற கிரேனும் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 22 பயணிகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடனடியாக மீட்டுப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்தை கிரேன்கள் கொண்டு மீட்கும் பணிகள் நடைபெற்றது. அப்பொழுது கிரேனும் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கிரேன் ஆபரேட்டர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.