கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் ராமு (வயது 83) கடந்த சில தினங்களாக மூச்சுத் திணறல் சம்பந்தமான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி திங்கள் கிழமை உயிர் இழந்தார். கணவர் இறந்த துக்க செய்தியை அறிந்த அவரது மனைவி சாவித்திரி (வயது 76) கணவரின் மரண செய்தி தாங்காமல் அதிர்ச்சி அடைந்து உயிர் இழந்தார்.
ஒரே சமயத்தில் கணவனும், மனைவியும் இயற்கை எய்திய சம்பவம் அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்த கணவன், மனைவி இருவரின் நான்கு கண்களும் அவர்களது குடும்பத்தினர் ஒப்புதலோடு புதுச்சேரியில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
இல்லற வாழ்விலும் ஒற்றுமையாக வாழ்ந்து கடைசி காலத்திலும் ஒற்றுமையாக உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின் படி இரண்டு கண்கள் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கும் என்பதால் இவர்கள் நான்கு கண்களும் எட்டு பேரின் வாழ்வில் ஒளியேற்ற கூடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Follow Us