ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் மேல் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் 25 வயதான சேதுராஜ். தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான மகாலட்சுமி என்பவரும் சேதுராஜும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் யாருக்கும் தெரியாமல் கடந்த 5-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். பெண் வீட்டார் திருமணத்தை ஏற்க மறுத்ததால், இளம் தம்பதியினரை தற்காலிகமாக பெருந்துறை பகுதியில் உள்ள சேதுராஜின் உறவினர் வீட்டில் தங்க வைக்க அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மகாலட்சுமியின் இரண்டாவது அக்கா கௌசல்யா கடந்த 8-ம் தேதி மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “தங்கையைப் பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அவரது பேச்சை நம்பிய சேதுராஜும் மகாலட்சுமியும் இருசக்கர வாகனத்தில் பெருந்துறை பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு கௌசல்யா, அவரது கணவர் சங்கர், நண்பர் ஒருவர் சிவப்பு நிற காரில் வந்திறங்கினர். பின்னர் “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம், வாங்க… அனைவரும் சேர்ந்து உணவகத்தில் சாப்பிடலாம்” என கௌசல்யா அன்பாக அழைத்துள்ளார். அக்காவின் பாசத்தை நம்பிய மகாலட்சுமி, கணவர் சேதுராஜுடன் சென்று பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டனர். பின்னர் பில் செலுத்திவிட்டு வெளியே வந்த போது, அங்கு மறைந்திருந்த நபர்கள் கிரே கலர் காரில் வந்து அக்கா கௌசல்யா உடன் சேர்ந்து மகாலட்சுமியும் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சேதுராஜ் உடனடியாக 100 டயல் செய்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த பெருந்துறை போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்பு இது தொடர்பாக சேது ராஜிடம் புகாரை பெற்ற பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்திச் சென்ற பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். பெருந்துறை போலீசார் துரிதமாக தேடுதல் பணியை மேற்கொண்டு கடத்திச் செல்லப்பட்ட மகாலட்சுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், பெண்ணின் சொந்த அக்காவே மகாலட்சுமியை கடத்திச் சென்றது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து மகாலட்சுமி கொடுத்த வாக்குமூலத்தின் பெயரில் பெருந்துறை போலீசார் 25 வயதான கௌசல்யா, 26 வயதான சந்தோஷ், கோத்தகிரி பகுதியை சேர்ந்த 27 வயதான சாதிக், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயதான லோகேஸ்வரன், மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனபால் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை, உடன்பிறந்த அக்காவே திட்டமிட்டு கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us