கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிவிடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மணிகண்டன். அதேபோன்று, வானாபுரம் அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் என்பவரின் மகள் தங்கரோஜா. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்தக் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவந்ததை அடுத்து, மணிகண்டன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இளம்பெண் தங்கரோஜாவை அவரது மாமா பையனுக்கு திருமணம் செய்துவைக்க முயன்று வந்துள்ளனர். அதற்கான திருமண ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வந்திருக்கிறது. இருப்பினும் காதலை கைவிட மனமில்லாத மணிகண்டனும், தங்கரோஜாவும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

Advertisment

அதன்படி, பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி இருவரும் குஞ்சரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் நவம்பர் 4-ம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதனையறிந்து பெண்ணின் வீட்டார் காதல் ஜோடிக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கரோஜா, “எனது உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரால் எங்களுக்கு உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம் ஜோடி தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment