கல்வராயன் மலையை ஒட்டியுள்ள கிராமத்தில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியை ஒட்டியுள்ள கொட்டப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் பிரகாஷ். இவர் துப்பாக்கியால் நெற்றியில் சுடப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து கரியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரகாஷ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முதற்கட்டமாக தங்கராசு என்பவர் நேற்று இரவு மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைக்க வீட்டில் இருந்த சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியை வைத்து கோழி ஒன்றைச் சுட்டுள்ளார். அப்பொழுது குறித்தவறி பிரகாஷ் நெற்றியில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே கோழி சுடுவதற்காக முயன்ற பொழுது துப்பாக்கிக் குண்டு குறித் தவறி பாய்ந்ததா அல்லது கொலை செய்யும் நோக்கில் சுடப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.