திருமணமான மூன்றே மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியையும், மனைவியின் சகோதரனையும் கணவன் படுகொலை செய்த சம்பவம்  தேனியில்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்துள்ள முத்தையன் செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் நிகிலா என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தாய் வீட்டில் வசித்து வந்த நிகிலா தனக்கு சொந்தமான பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக அண்ணன் விவேக்குடன் பிரதீப் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அப்போது பிரதீப்பிற்கும் நிகிலா மற்றும் அவருடைய அண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்த பிரதீப், மனைவி நிகிலா மற்றும் மைத்துனர் விவேக் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் அந்த பகுதியில் இரட்டை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போடிநாயக்கனூர் ஊரக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையில் ஈடுபட்ட பிரதீப்பை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நிகிலா மற்றும் அவருடைய அண்ணன் விவேக் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு திருமணமான மனைவியையும், மனைவியின் சகோதரனையும் கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.