புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி காவல் சரகம் அமரசிம்மேந்திரபுரம் அருகில் உள்ள ஆத்தங்காடு கிராமத்தில் வயல்வெளியில ஏராளமான பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள வாய்க்கால் பகுதியில் புதருக்குள்ளிருந்து பச்சிளங்குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது.

Advertisment

இதனையடுத்து பெண்கள் ஓடிச் சென்று அங்கு பார்த்த போது, சில மணி நேரங்களுக்கு முன்பு பிறந்து தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத ரத்தம் காயாத நிலையில் பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், குழந்தையை மீட்டு உடனடியாக உடலை துடைத்து சுத்தம் செய்துள்ளனர்.

Advertisment

அதனை தொடந்து, புதருக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை பற்றி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைந்து வந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாலை நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்து, குழந்தை பெற்று குழந்தையை தூக்கிச் வீசிச் சென்ற கல்மனம் படைத்த பெண் யார் என்று அமரசிம்மேந்திரபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள தஞ்சை மாவட்டப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அதிகாரிகள்  விசாரனை செய்து வருகின்றனர்.

Advertisment