கேரளாவில் தெரு நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து 12 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்பொழுது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஜான்பால். எப்போதும் தன்னுடைய 12 வயது மகளை ஆட்டோவில் அழைத்து சென்று பள்ளியில் விடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல ஜான்பால் அவருடைய மனைவி மற்றும் 12 வயது மகள் சிமியுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது திடீரென தெருநாய் ஒன்று குறுக்கே புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவானது நடுசாலையிலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜான்பால் மற்றும் அவருடைய மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். 12 வயது மகளான சிமி படுகாயம் மீட்கப்பட்டார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே கேரளாவில் தெருநாய் தாக்குதல் சம்பவங்கள் ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில் தெருநாயால் ஏற்பட்ட விபத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வைரலாகி வருகிறது.