சென்னை பூந்தமல்லியில் மதிமுக செயற்குழு கூட்டம் இன்று (10.07.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “நான் உயிர கொடுத்த கட்சியை 31 வருஷமா காப்பாற்றி வந்திருக்கிறேன். நம்மைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள். நம்முடைய இயக்கம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். இதற்கு மத்தியில் தான் இந்த இயக்கம் ஆதார சுருதியாக, ஜீவன் நிறைந்ததாக, ஆயிரம் ஆயிரம் தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்க்கின்ற தோள் பலம் கொண்டவர்களாக, என்னுடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்ற, ‘கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அவே படை’ என்ற வள்ளுவன் வாய்மொழிக்கு இலக்கணமாக ஈட்டி பாய்ந்தாலும் இமை கொட்டாமல் மார்பு காட்டுகின்ற வீரர் கூட்டம் எங்கே?.
அது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம். உங்கள் கைதை கண்டித்து தமிழகம் முழுவதிலும் நாளை மறுநாள் மறியல் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. நம் தோழர்களை எல்லாம் சிறையிலே கொண்டுபோய் அடைத்து விடுவார்கள். அவர்களை வெளியே விடமாட்டார்கள். அதனால் என்ன என்று கேட்டேன்?. நீங்கள் இப்பொழுது ஒரு அறிக்கை தாருங்கள். எனக்காக அல்லது என்னோடு இருக்கிற 8 பேருக்காக நீங்கள் மறியல் செய்ய வேண்டாம். போராட்டம் தேவையில்லை என்று பம்பாயிலிருந்தே ஒரு அறிக்கை கொடுங்கள். நம் தோழர்கள் கைது செய்யமாட்டார்கள். அமைச்சர் பதவியிலே இருந்து கொண்டு மத்திய அமைச்சர் பதவியிலே இருந்து அத்தனை சுகபோக சௌபாக்கியங்களையும் அனுபவித்துக் கொண்டு நான் சிறையில் இருக்கும் போதே 2 முறை வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுப்பயணம் நடத்திவிட்டு நான் பொடா கைதியாகச் சிறை செல்ல இருக்கிற இந்த நேரத்தில் எட்டு பேர் ஏற்கனவே அழைக்கப்பட்டு விட்டார்கள்.
தியாக தலைவர் சங்கரய்யா உள்ளிட்ட மார்க்சிஸ்ட் தலைவர்கள் அருகிலே இருந்தபோது மாலையில் தொடங்கிய பேரணி எழுச்சி பேரணியைப் போலவே மறுநாள் காலை 7 மணிக்குத்தான் முடிந்தது. ஆனால் அதனை எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை. என்ன காரணம் தெரியுமா?. ஒரே ஒரு காரணம் நான் கேட்டேன். எந்த பத்திரிக்கையிலே எனக்கு மிக நண்பர்களாக இருந்தவர்கள் இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்களிடம் கேட்டேன். லட்சக்கணக்கில் வந்தார்களே என் தோழர்கள். ஒரு நான்கு வரி அதைப்பற்றி ஒரு பத்திரிக்கையும் எழுதவில்லையே?. உங்கள் பத்திரிக்கையும் அதைக் குறிப்பிடவில்லையே. தமிழ்நாட்டுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேவை என்பதை யோசித்தாவது எங்களை இரண்டு வரியாவது பாராட்டி எழுதி இருக்கலாமே?. என்றேன்.
அப்போது அவர்கள் தயங்கி தயங்கி சொன்னார்கள். அப்படித்தான் நாங்கள் முடிவெடுத்தோம். மதிமுக மாநாட்டை நாடறியச் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டுதான் மாநாட்டுக்கு வந்தோம். ஆனால் நீங்கள் எடுத்த எடுப்பிலேயே முதல் தீர்மானம் என்று சொல்லி நீங்கள் வந்து முன்மொழிந்தீர்கள். சிங்கள ஓநாய்கள் வெறி நாய்களுக்கு மத்தியில் இலங்கை தீவில் சுதந்திர தமிழீழம் ஒரு கொற்றமாக அரசாக இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே தனிக்கொற்றம் நடத்திய அந்த ஈழ தமிழர்கள் இன்று இன படுகொலையால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிறார்கள்.
கற்பை,மானத்தை உயிரை விட பெரியதாகக் கருதுகிற என் தாய்மார்கள் என் சகோதரிகள் ஆயிரக்கணக்கிலே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆகவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து சுதந்திர தமிழ் ஈழத்தை உலகிலே நிலைநாட்டுவோம் என்று நான் கொண்டுவந்த முதல் தீர்மானத்தைச் சொல்லி நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்கள். ஈழத் தமிழர்களை முன்னிலைப்படுத்துகிறீர்கள். அதனால் உங்கள் உரையை எங்கள் பத்திரிக்கையில் போடுவதில்லை என்று எங்கள் நிர்வாகம் முடிவு செய்துவிட்டது என்று என்னிடம் சொன்னார்கள்.