தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகப் பகுதியாகத் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகச் சென்னை தேனாம்பேட்டையில் தமிழக வெற்றி கழகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள வார்ரூமில் நேற்று (24.07.2025) இரவு விஜய் பார்வையிட்டார். அங்குத் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 200 பேர்கள் தேர்தல் பணிகளை வார்ரூமில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் தலைவர் விஜய் வார் ரூமிற்கு சென்ற நிலையில் 2வது முறையாகச் சென்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்காத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலை ஆய்வு செய்தபிறகு விஜய் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிய வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இது போன்று இதே போன்று த.வெ.க.வினருக்கு விஜய் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.