Advertisment

“நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்” - திருச்சி சிவா எம்.பி.!

trichy-siva

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது அவர்  காமராஜர் குறித்தும் பேசுகையில், “அப்போது எனக்கு 23, 24வது வயது இருக்கும் கலைஞர் என்னை காரில் அழைத்துக்கொண்டு செல்வார். அப்போது ஏதாவது நிகழ்வு பற்றி என்னிடம் சொல்லுவார். இதற்கு சில பேர் சொல்வார்கள், ‘என்ன சின்ன பையன் கிட்ட சொல்லிட்டு இருக்கிறார்’ என்று. ஆனால் அவருக்கு (கலைஞருக்கு) தெரியும் இதைப் பற்றி நான் கூட்டத்தில் பேசுவேன். மக்களிடம் சரியாகக் கொண்டு  சேர்ப்பேன் என்று. அது மாதிரி நிறைய எனக்குச் சொல்லுவார்.

Advertisment

அதில் ஒரு நாள், ‘காமராஜர் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுக்க கண்டனம் கூட்டம் போடுறாரு. காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற எல்லா பயனியர் விடுதிகளிலும் குளிர் சாதன வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டேன். நம்மை எதிர்த்துத்தான் பேசுறாரு. ஆனால் அவருடைய உடல்நலன் கருதி நான் எல்லா பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொன்னேன்’ எனக் கூறினார். அதன் பின்னர் இவ்வளவு பெரிய உள்ளமா அவருக்கு என்று கடைசியாகக் கையை பிடித்துக்கொண்டு உயிர் போறதுக்கு முன்னாடி நீங்க:ள்தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றவேண்டும் என்று கூறினார்’” எனப் பேசியிருந்தார். திருச்சி சிவாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் இது குறித்து திருச்சி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போது கூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம். 

“குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!” என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை “கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.

Advertisment

நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலின்வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட திமுக தொண்டன். இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!”எனத் தெரிவித்துள்ளார்

congress dmk trichy siva kamarajar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe