“பா.ஜ.க.வில் ஏராளமானவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்” - தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி!

thiruma-pm

விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இன்று (16.07.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜகவில் ஏராளமானவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். நட்பு வேறு. உள் வாங்கி இருக்கிற கொள்கை வேறு. பாஜகவில் இருப்பவர்களுக்கு அவர்களின் கொள்கை எவ்வளவு முக்கியமோ அதுபோல எனக்கு விடுதலை சிறுத்தைகளின் கொள்கை கோட்பாடுகள் முக்கியம். என் கருத்து எனக்கு. அவர்கள் கருத்து அவர்களுக்கு. அதைத் தாண்டி நட்பு இருப்பது ஒன்றும் தவறில்லை. அந்த அடிப்படையிலே கே.பி. ராமலிங்கம் எனக்கு நன்கு அறிமுகமானவர். நல்ல பழக்கமானவர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திலே நாங்கள் அடிக்கடி சந்திக்கிற வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம். 

அந்த நட்பின் அடிப்படையிலே அவர் சந்திக்க வந்தால் நிச்சயமாக வரவேற்போம். அதிலே எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் பாஜக கொள்கை, அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு நேர் முரணானது என்பதை நாங்கள் புரிந்திருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம். திமுகவோடு இருப்பதால் நாங்கள் பாஜகவை எதிர்ப்பதாகக் கருதுகிறார்கள். அது அல்ல உண்மை. திமுக கூட்டணி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி பாஜக கொள்கைகளை அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தனியே இருந்தாலும் பாஜக கொள்கையை நாங்கள் எதிர்ப்போம். அதற்குக் காரணம் பாஜக மீதுள்ள தனிப்பட்ட அரசியல் காரணங்கள் அல்ல. தேர்தல் அரசியல் காரணங்கள் அல்ல. அம்பேத்கர் சமத்துவத்தை இங்கே நிலைநாட்டுவதற்காக தமது இறுதி மூச்சு வரையில் அல்லும் பகலும் அயராது உழைத்தவர். 

அந்த சமத்துவ கொள்கைகளை ஏற்றுக்கொண்ட ஒரு இயக்கமாக பாஜக இல்லை. சாதி ஒழிய வேண்டும் பாலினத்தின் பெயரால் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நிலவுகிற பாகுபாடுகள் களைந்தெறியப்பட வேண்டும். அதற்கு இங்கே ஒரு மதச்சார்பற்ற அரசு வலுவாக இருந்திட வேண்டும். இவையெல்லாம் அம்பேத்கரின் கனவுகள். ஆனால் மதச்சார்பின்மைக்கு நேர் எதிரான இயக்கம் பா.ஜ.க. அதனால் பா.ஜ.க.வை விமர்சிக்கிறோம். திமுக கூட்டணி இருப்பதனால் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம் என்றால் அது தேர்தல் அரசியல் காரணங்கள் என்ற பொருளில் அமைந்துவிடும். கூட்டணி நலன்கள் என்கிற பொருளில் அது அமைந்துவிடும். ஆனால் கருத்தியல் அடிப்படையிலே பாஜக, அம்பேத்கரின் உயிர் மூச்சு கோட்பாடாக இருக்கிற மதச்சார்பின்மைக்கே எதிரானது. அதுதான் எங்களுடைய விமர்சனம். வேறு எந்த தனிநபர் விமர்சனமோ தனிப்பட்ட அரசியல் காரணங்களோ கிடையாது” எனப் பேசினார்.

b.j.p kp ramalingam thol thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Subscribe