பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் நாளை (25.07.2025) முதல் சுமார் 100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்க உள்ளார். 

இதன் காரணமாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் அனுமதி இல்லாமல் பா.ம.க.வின் கட்சிக் கொடி மற்றும் சின்னங்களை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனவும், தமிழக டி.ஜி.பி.யிடம் இந்த பிரச்சார பயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மனு அளிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியானது பா.ம.க. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க. உட்கட்சி விவகாரத்தில் நிலவிவரும் மோதல் போக்கு விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமதாஸின் இத்தகைய நடவடிக்கை என்பது மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று (24.07.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் நடக்காத ஒரு மோசமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. யாரும் எந்த தலைவரும் இதுவரை எதிர்கொள்ளாத ஒரு மோசமான செயலை செய்திருக்கிறார்கள். அதாவது  இங்கே நான் உட்கார்ந்திருக்கிற இடத்தை சுற்றி ஒட்டுக்கேட்பு கருவியை வைத்திருக்கிறார்கள். அதை நாங்கள் கண்டுபிடித்து காவல்துறையில் ஒப்படைத்திருக்கிறோம். அந்த கருவி இங்கிலாந்தில் வாங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் அல்லது பெங்களூரில்  கூட கிடைக்கும். பத்து நாளைக்கு ஒரு முறை அதை சார்ஜ் பண்ண வேண்டும். அதை யார் வைத்தார்கள் எதற்காக வைத்தார்கள் என்பது இன்னும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இங்கே இருக்கறவங்க மேல் சந்தேகம் உள்ளது. அதனை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். தனியார் துப்பறியும் நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கை கொடுத்துள்ளது. உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழ்நாட்டு போலீஸ் என்பதை காவல்துறை நிரூபிக்க வேண்டும். மே 30ஆம் தேதி முதல் பா.ம.க.வின் தலைவராக நானே இருக்கிறேன். பா.ம.க. புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பாமகவிற்கு தைலாபுரத்தில் மட்டுமே தலைமை அலுவலகம் உள்ளது. வேறு எங்கும் கிடையாது. சென்னை உள்ளிட்ட இடங்களில் பா.ம.க.விற்குத் தலைமை அலுவலகம் வைத்தால் அது சட்டவிரோதம்” எனப் பேசினார்.