தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்குக் கிளை, வட்டம், மாவட்டம் மற்றும் மாநிலம் என அனைத்து நிலை நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 18 வயது 35 வயது வரையிலான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் போட்டியிடலாம், வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இதற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதன்படி அதிக வாக்குகள் பெற்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி. சூரிய பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு ஷிப் வெளியிட்டுள்ளார். அதே சமயம் 2 மற்றும் 3 ஆம் இடங்களைப் பிடித்த அருண் பாஸ்கர், தினேஷ் ஆகியோர் முதன்மை துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்குக் கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.