புதுக்கோட்டை தி.மு.க  மாநகரச் செயலாளராக இருந்த அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான செந்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த இடத்திற்குப் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளரான ராஜேஷ் திமுக மாநகர பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய மாநகரப் பொறுப்பாளர் அறிவிப்பையடுத்து மாநகர வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகரப் பொறுப்பாளரை மாற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இது தொடர்பாகச் சென்னை வரை சென்று கட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். அதன் பிறகும் பொறுப்பாளர் மாற்றம் செய்யப்படவில்லை என்ற நிலையில் கடந்த மாதம் நடந்த மண்டலப் பொறுப்பாளர் நேரு கலந்து கொண்ட கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது விரைவில் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று மூத்த தலைவர் கவிதைப்பித்தன் சமாதானம் செய்து வைத்தார். ஆனால் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில் தான் இன்று (08.07.2025) புதுக்கோட்டை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பி.எல். 2 கூட்டம் மண்டலப் பொறுப்பாளர் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் அதே தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மெய்யநாதன் படம் வைக்கப்படவில்லை என்ற சலசலப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் நடந்த வடக்கு மாவட்ட திமுக பி.எல். 2 கூட்டத்திற்கு மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் வந்தனர். அப்போது மாநகரப் பொறுப்பாளருக்கு எதிரான அணியினர் ஏராளமானோர் திரண்டு நின்று “மாநகரப் பொறுப்பாளரை மாற்று” என்ற பதாகையைப் பிடித்துக் கொண்டு முழக்கமிட்டனர். அப்போது அமைச்சர் நேரு உள்ளிட்டவர்கள் வந்த போது மாநகரப் பொறுப்பாளரை மாற்ற வேண்டும். பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற போராட்டத்தில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

அதோடு மாநகரப் பொறுப்பாளரை மாற்றவில்லை என்றால் “எங்களை நீக்குங்கள்” என்று கூறி வழிமறித்து நின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தலைமை கவனத்திற்குக் கொண்டு போய் நடவடிக்கை எடுப்போம். தேர்தல் நேரத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று கூறி மறித்து நின்றவர்களைத் தள்ளிக் கொண்டு நிகழ்ச்சிக்குச் சென்றார். போராட்டத்தில் நின்றவர்களே இதே பதிலைத் தான் பல முறை கேட்டிருக்கிறோம் என்கின்றனர் விரக்தியாக. தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள்கட்சி பூசல் அதிகமானால் தேர்தலைத் தான் பாதிக்கும். அதனால் கட்சித் தலைமை உடனே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்கின்றனர் விவரமறிந்த மூத்த திமுகவினர்.