“வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்” - ரவிக்குமார் எம்.பி. கருத்து!

ravikumar-std

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ளது வல்லக்கோட்டை முருகன் கோவில். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் கடந்த 2008ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இதனையடுத்து கோவிலைப் புனரமைத்து குடமுழுக்கு நடத்த, இந்து சமய அறநிலையத் துறையால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (07.07.2025) குடமுழுக்கு நடைபெற்றது. 

இத்தகைய சூழலில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை குடமுழுக்கு விழாவிற்குச் சென்றிருந்தார். அப்போது கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்படும் இடத்திற்கு செல்ல செல்வப்பருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதே சமயம் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் குன்றத்தூரில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “பக்தி இயக்கம் செய்ததை விடப் பக்தி இயக்கம் கண்ட கனவை விட தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை அமைச்சரால் ஆலயங்களில் வழிபாடுகளும் கும்பாபிஷேகங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 3000 கோவில்களுக்கு மேல் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. 4000 கோடிக்கு மேல் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. நானே சாமி கும்பிட முடியவில்லை. அங்குச் சென்றபோது பத்தோடு பதினொன்றாக நின்னுட்டு அதிகாரிகள ரொம்ப இர்ரெஸ்பான்சிபிலாதான் இருந்தார்கள். 

யாரையும் அங்கு வரவேற்பதற்கும் ஆட்கள் இல்லை. நாங்கள் கேட்பாறட்டு தான் கிடந்தோம். அதிகாரிகள் கும்பல் கும்பலாக சேர்ந்து கொண்டு அவர்கள் அவர்களை பாத்துக்கிட்டே தான் இருந்தார்களே தவிர எதற்காக எங்களை அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. அதிகாரிகள் தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தொகுதி எம்எல்ஏவான என்னால் கூட சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. 2000 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக நின்று தரிசணம் செய்தேன்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த செய்தியை குறிப்பிட்டு விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா?. அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

hrce ravikumar Selvaperunthagai vck
இதையும் படியுங்கள்
Subscribe