பா.ம.க.வில் அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் நாளை (25.07.2025) முதல் சுமார் 100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்க உள்ளார். இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் அனுமதி இல்லாமல் பாமகவின் கட்சிக் கொடி மற்றும் சின்னங்களை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனவும், தமிழக டிஜிபியிடம் இந்த பிரச்சார பயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மனு அளிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியானது பா.ம.க. அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க. உட்கட்சி விவகாரத்தில் நிலவிவரும் மோதல் போக்கு விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமதாஸின் இத்தகைய நடவடிக்கை என்பது மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.