பா.ம.க.வில்  அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

இத்தகைய சூழலில்  தான் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம்  மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், “ 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று உள்ளேன். எதற்காக உங்களுக்காக, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, வாழ்வு இழந்த மக்களுக்காக, ஏமாற்றப்பட்ட மக்களுக்காக, என் கால்கள் படாத கிராமங்களே இல்லை. 10.5  இட ஒதுக்கீடு என்று கூப்பாடு போட்டு வருகிறீர்கள். உங்களிடம் விலை மதிப்புள்ள வாக்கு உள்ளது.

10.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற உங்களிடம் அறிய, விலைமதிப்பற்ற ஆயுதமாக வாக்கு உள்ளது. ஆனால் நீங்கள் தேர்தல் நேரத்தில் யார் யாருக்கோ வாக்களிக்கிறீர்கள்” எனப் பேசியிருந்தார். மற்றொருபுறம் 10.5% வன்னியர் இட ஒதுக்கீட்டை தரமறுப்பதாக கூறி திமுக அரசைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் வரும் 20ஆம் தேதி (20.07.2025) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார். இந்நிலையில் திமுக அரசைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என ராமதாஸ் கூறியுள்ளார்.