பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலையில் பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக நேற்று (29.06.2025) மாலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பாமகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் தலைவராக இருப்பவருக்கும், பொதுச் செயலாளராக இருப்பவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடச் சின்னம் பெறுவதற்கும், கையெழுத்திடவும் அதிகாரம் உள்ளதாக அக்கட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ராமதாஸ் வழிகாட்டுதலின் பெயரில் தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்ற விதியும் இருப்பதாக பாமக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்திற்குச் செல்வதற்காக அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றுள்ளதாகவும், அதோடு பாஜக மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “‘முகநூலில் மருத்துவர் ஐயா அவர்கள் வாழ்க’ என்று பதிவிட்டீர்கள் என்றால் உங்களைத் திட்டுவார்கள். அதற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது” எனத் தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘நேற்று பேட்டியில் உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிற மாதிரி சொல்லிருந்தீர்கள்..’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “உறுதியாக அச்சுறுத்தல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.