அ.தி.மு.க வில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அ.தி.மு.க அணி - ஒ. பன்னீர்செல்வம் அணி என செயல்பட்டு வரும் நிலையில் ஒ.பி.எஸ் அணி கூட்டணியுள்ள பா.ஜ.க. வை எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க வும் கூட்டணியில் இணைந்துள்ளது. இதனிடையே பிளவுகள் வேண்டாம் என்று அ.தி.மு.க. விற்குள்ளேயே பல நிர்வாகிகள் சமாதானம் செய்தும் பிரிந்தே உள்ளது.இந்த நிலையில் தான் ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் படிப்படியாக எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒ.பி.எஸ் அணி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஞான. கலைச்செல்வன் தலைமையில் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ராமையா, இணைச் செயலாளர் பரிமளா, துணைச் செயலாளர் தமயந்தி, கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் முத்துவைரவன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று (30.06.2025) சேலம் எடப்பாடியில் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதில், வழக்கறிஞர் ஞான.கலைச்செல்வன் கடந்த காலங்களில் அ.தி.மு.க வில் ஜெ. பேரவை மாவட்டச் செயலாளராகவும், 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராகவும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஒ.பி.எஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு அ.தி.மு.கவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்னும் எஞ்சியுள்ள நிர்வாகிகளும் விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர் என்கின்றனர்.