தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே அதிமுக - பாஜக இடையே கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்திற்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதோடு அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாகக் கூறி வருகின்றனர்.

இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விடத் தனியாகக் கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்டுகளை பெறலாம் என்ற யோசனையில் ஓ. பன்னீர்செல்வம் இருப்பதாகத் தகவல் வெளியானது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் இன்று (14.07.2025)  முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் அவரிடம், “விஜய்யின் அரசியல் நகர்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “விஜயுடைய அரசியல் நகர்வுகள் இன்றுவரை நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறார். அவர் எதிர்காலத்தில் என்ன நிலையை ஜனநாயக முறைப்படி எடுக்கிறார் என்பதைப் பார்த்து அவருக்கு எங்களுடைய தார்மீக ஆதரவு உண்டு” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “ஒரு வேளை உங்களிடம் ஆதரவு கேட்டால் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் ஆதரிப்பீர்களா?” என்ற கேள்விக்கு, “எதிர்காலத்தில் நல்லது நடக்கும்” எனத் தெரிவித்தார்.