அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.

 இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பா.ஜ.க. சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட தலைவர் ராஜேஸ் தலைமையில் நேற்று (19.07.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பெண் நிர்வாகி பரமேஸ்வரி பேசுகையில், “வருங்கால துணை முதல்வர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களே...” என அழைத்தார். அப்போது மேடையில் இருந்த நயினார் நாகேந்திரன் இதற்கு உடனடியாக  மறுப்பு தெரிவிக்கும் வகையில் அப்படி அப்படி எல்லாம் கூறக்கூடாது என்ற தொனியில் அறிவுறுத்தினார்.

முன்னதாக  அதிமுக - பாஜக  இடையே கூட்டணி உறுதியான பிறகு கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்றும் பேசிய்ருந்தார். அதே சமயம் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொட்ர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.