அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் கலந்து கொண்ட பரப்புரை ஒன்றில் பேசுகையில், “கூட்டணி குறித்து அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்குக் கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும்; வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் விருப்பம். பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னீர்கள், பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்னீர்களே என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்கிறார்.
எனக்கு ஷாக் ஆகிவிட்டது. என்ன முதலமைச்சர் இப்படிக் கேட்கிறார் என்று. அதிமுக எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அது எங்கள் விருப்பம். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?. நீங்கள் ஏன் கதறுகிறீர்கள்? என்று சொன்னவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைதி ஆகிவிட்டார். திமுக ஆட்சியை அகற்ற பாஜக எங்களோடு இணைந்துள்ளது. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல”எனப் பேசியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக நாகப்பட்டினத்தில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துப் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி உள்நோக்கத்தோடு சொல்லவில்லை. ஊடகத்தினர் இது தொடர்பாகக் கேட்பீர்கள் என்று நன்றாகத் தெரியும். திமுகவினர் எப்படிக் கேட்கின்றார்கள் நீங்கள் அடகு வைத்துவிட்டுச் சென்று விடுவீர்கள். பாஜகவினர் களபிகரம் செய்துவிடும் என்று சொல்லிப் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தனது பதிலைத் தெரிவித்துள்ளார். இதில் உள்நோக்கமோ, உள்கருத்தோ எதுவும் இல்லை. நான் காலையிலேயே தொலைப்பேசியில் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவிட்டேன். எனவே எங்கள் தேசிய ஜனநாயக ஆட்சி அமையும்” எனப் பேசினார்.