சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இன்றைக்குக் கொடுமையான விஷயம் என்னன்னா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன தெரியுமா சொல்லிருக்கிறார்கள்?.
ஏற்கனவே இவருக்கு இதயம் பாதிக்கப்பட்டதென்று சொல்லிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடூரமான செயல் இது?. அவரின் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னாடியே காயம் இருக்கிறது அப்படியென்று சொல்லி இருக்கிறார்கள். இதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். காவல் நிலையத்திலிருந்து வெளியே தூக்கிட்டு போயி அடித்திருக்கிறார்கள். கடத்திக் கொண்டு போய் அடித்திருக்கிறார்கள். அதனைக் கூட இருந்து வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கு. அவருடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
எங்குப் பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள். இதே மாவட்டத்தில் உள்ள சிங்கப்புனரியில் ஏழு வயது சிறுவன் பள்ளிக்கூடத்துக்குப் போகிறான். சிறுவன் இறந்துவிட்டான் அப்படியென்றால் உடல் காயங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் பெற்றோர்களுக்குத் தகவல் போது சாயங்காலம். எப்படி இவ்வளவு பெரிய கொடூரங்கள் எல்லாம் நடைபெறுகிறது. உண்மையிலேயே பொதுமக்கள் தான் இதற்கெல்லாம் ஒரு தீர்ப்பு எழுத வேண்டும். திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்து நான்கு வருஷம் ஆகிறது. 24 காவல் நிலைய மரணங்கள் படுகொலைகள் நித்தம் நித்தம் நடக்கிற படுகொலைகள் இதைப் பொதுமக்கள் பார்த்துக்கொண்டு தக்க தீர்ப்பை அவர்கள் தர வேண்டும்.
இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்போது கூட அஜித்குமாரின் தாயார் சொன்னார், ‘எங்களுக்கு இந்த உதவி எல்லாம் பெரியதல்ல. நீதி வேண்டும்’ என்று கேட்கிறார். ஆக இந்த கொலையைச் செய்தவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். தலைமைச் செயலகத்தில் இருந்து யார் சொன்னாருங்கறத அவருடைய பெயர் வெளியிடப்படவேண்டும் அவரும் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.